Tuesday, June 14, 2011

ஜெயலலிதாவுடன் சோனியா தூதர் திடீர் சந்திப்பு..!



டெல்லி வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவை நேற்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஜெயலலிதாவை சந்தித்துள்ள முதல் முக்கிய காங்கிரஸ் தலைவர் ஷீலா என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட முக்கியமாக, சோனியாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஷீலாவும் ஒருவர். எனவே இந்த சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சோனியா சார்பில் ஜெயலலிதாவை ஷீலா சந்தித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

டெல்லி சென்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அங்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து ஜெயலலிதாவை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வந்து சந்தித்தனர். அதில் முக்கியமானவர் ஷீலா தீட்சித்.

தமிழ்நாடு இல்லம் வந்த ஷீலா தீட்சித், ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டபோது, இது கர்ட்டசி கால் (மரியாதை நிமித்தமான சந்திப்பு). முதல்வராகப் பதவியேற்றதற்காக ஜெயலலிதாவுக்கு வாழ்தது தெரிவித்தேன் என்றார் ஷீலா.

அதற்கு மேல் செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளிக்க மறுத்து விட்டார் ஷீலா. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஷீலா கூறினாலும் கூட சோனியா சார்பாகத்தான் ஷீலா வந்து சந்தித்திருப்பதாக கருதப்படுகிறது.

ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தின்போது சோனியாவை அவர் சந்திக்கக் கூடும் என்று பேச்சு நிலவி வந்தது. இருப்பினும் இந்த சந்திப்பால், திமுகவுடனான கூட்டணி முழுமையாக முறிந்து போய் விடலாம் என்று கருதிய சோனியா கடைசி நேரத்தில் சந்திப்பைத் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தன் சார்பில் ஷீலாவை அவர் அனுப்பி வைத்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதேபோல பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், சிபிஐ தேசியச் செயலாளர் ராஜா ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

சந்திப்பு குறித்து ராஜா கூறுகையில், ஜெயலலிதாவுடனான சந்திப்பின் போது அரசியல் பற்றி பேசவில்லை. மின்சார பற்றாக்குறையாலும், கடன்சுமையாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதும் ஜெயலலிதாவுக்கு பாரதீய ஜனதா சார்பில் வாழ்த்து தெரிவித்தேன். அப்போது டெல்லி வரும் போது சந்திப்பதாக தெரிவித்தார். அதன்படி இந்த சந்திப்பு நடைபெற்றது என்றார்.

1 comment:

  1. In fact, Sonia doesn't like Shiels Dixit. Sonia has been trying hard to sideline Shiels, but couldn't because of her popularity. Having been recelected several times as Delhi CM she is not and office bearer of AICC, an indication of Sonia's disaffection towards shiela. This meeting is of no significance, similar to the one shiela had with Vijayakanth several years ago.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...