Thursday, October 3, 2013

யானைகளை கண்டிப்பாக பாதுகாக்கனும்... ஏன் தெரியுமா..?பார்ப்பதற்கு முரடு போல் இருந்தாலும், "மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது. சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. அதன் தோற்றம், குணாதிசயங்கள் சுவராஸ்யமானவை. 

உலகில் மனிதனுக்கு அடுத்து உருவ பரிமாற்றம் அடைந்த ஒரே விலங்கு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உண்டு. 

தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது மடல்கள் இருக்கும். வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனிஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் குள்ளமானவை. கூட்டமாக வாழக்கூடியவை. 

ஆண் யானை பருவ வயதை (15) அடைந்தவுடன், மற்ற யானைகளால் தனியே விரட்டிவிடப்படும். இப்படி விரட்டப்பட்ட "பேச்சிலர்கள்' தனிக்கூட்டமாக வாழும். வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டி. குட்டிகளை கண்டிப்புடன் வளர்க்கக்கூடியவை. அடுத்து "சீனியாரிட்டியான' யானை, வயதான பெண் யானைக்கு பிறகு "பதவிக்கு" வரும். 

யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். பெரும்பாலும் ஆண் யானைக்குதான் தந்தம் இருக்கும். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத யானைகளை "மக்னா' என்கின்றனர். 

யானையின் வால் அடிப்பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், "வி' வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.உணவு, தண்ணீர், நிழல் போன்றவற்றை கணக்கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை காட்டை சுற்றி வரும்.

 இயற்கையாகவே ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புல் தேவை. சராசரியாக யானையின் எடை 4000 கிலோ. தோலின் எடை மட்டும் ஆயிரம் கிலோ. தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும். நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் "டென்ஷன்' ஆகும். மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் "எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக யானை கருதப்படுகிறது. ஞாபகசக்தி அதிகம். 


மதம் பிடிப்பது ஏன்?

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் மதம் என்கிறார்கள். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். அதிகபட்சம் 45 வயது வரை மதம் பிடிக்கும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும். மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். யானைகள் சந்திக்கும்


சவால்கள் :

பரவலான மலைப்பகுதிகள் இல்லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. 

ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன. இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு திரும்பிக் கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அதை உண்ணும் யானை, ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. 


யானையை பாதுகாப்பது முக்கியம் :

யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகளை விரும்பி உண்ணும். அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.

யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் போன்றவை உண்ணும். மரக்கிளைகளை உடைத்து செடிகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி முயல் போன்ற சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.

இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருக்கும் யானைகளை பாதுகாப்பது நமது கடமை. அதேசமயம் இயற்கை வனங்களை அழிக்காமல், ரசித்து, அதோடு ஒன்றி வாழ்வது சுற்றுச்சூழலுக்கு செய்யும் நாம் செய்யும் பேருதவி. 

Thanks - டாக்டர் கலைவாணன்,
யானைகள் நல மருத்துவர், தேனி.
மொபைல்: 94434 61712 

1 comment:

  1. யானைப் பற்றிய தகவல்கள் தந்த டாக்டர் கலைவாணன் அவர்களுக்கு நன்றிகள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...