Sunday, April 7, 2013

காங்கிரஸ்-பா.ஜ., கலைஞரின் ஆடுபுலி ஆட்டம்...!


சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, சிறு செயல்களால் கோபமடைந்து, "உம் பேச்சு... கா... டூ...' என்று சொல்லி கொள்ளும். சிறிது நேரம் கழித்து, டூ விடப்பட்ட குழந்தை, சாப்பிட ஏதாவது தந்தால், "உம் பேச்சு பழம்' என்று சொல்வதைப் போலுள்ளது, காங்கிரசிடம், தி.மு.க., "கா... டூ...' விட்ட கதை. 

ஈழ தமிழர்களின் இனப் படுகொலையை, தடுத்து நிறுத்த வேண்டிய நேரத்தில் தடுக்காமல், தன் மக்களின் பதவி சுகத்திற்காகவும், ஊழலில் ஏற்பட்டிருக்கும் களங்கத்தை மூடி மறைப்பதற்காகவும், அப்போது மவுன சாமியரைப் போல் பேசாமல் இருந்து விட்டு, தற்போது, "நான் வாபஸ் வாங்கியதால், என்ன விடிவுகாலம் பிறந்து விட்டது?' என்று பேசியுள்ளதில் இருந்து, இவரின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை, மக்கள் புரிந்து கொண்டிருப்பர். 

ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் போன்றவர்கள், இவரை ஒப்புக்கு சமாதானம் செய்வதற்காக, சென்னைக்கு வந்து சென்ற, 10 மணி நேரத்தில், வாபஸ் நாடகம் அரங்கேற்றி விட்டார். அம்மூவரிடம் இவர் என்ன பேசியிருப்பார் தெரியுமா...


* இந்த அம்மாவுக்கு, காவிரி பிரச்னையில், மத்திய அரசு இதழில் வெளியிட, சுப்ரீம் கோர்ட் மூலம் பெற்ற வெற்றியால், அவர்களின் செல்வாக்கு கூடியுள்ளது.


* தற்போது, தமிழக மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து, மத்திய அரசுக்கு எதிராக திரும்பியுள்ள சூழ்நிலையில், இதை இந்தம்மா, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, என்னையும், என் கட்சியையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவார் போலுள்ளது.


* நீங்கள் இந்த தேர்தலில், தமிழகத்தில் போணியாக போவதில்லை என்பது உறுதி. அதனால், உங்களுடன் நாங்களும் சேர்ந்திருந்தால், நாங்களும் தேற மாட்டோம்... அதனால், இந்த நேரத்தில், நான் தற்காலிகமாக விலகுகிறேன்.


* எங்களால் காங்கிரசுக்கு எந்த பாதகமும் வரப்போவதில்லை என்று உணர்ந்து தான், நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். 

சோனியாவிடம் என் நன்றி கடனை சொல்லி விடவும். நான் சிறந்த கதை ஆசிரியர் என்பதால், நானே இந்த வாபஸ் நாடகத்தை அரங்கேற்றுகிறேன். -இவ்வாறு சொல்லியிருப்பார்; அவர்களும் இதை ஆமோதித்து சென்றிருப்பர். ஆனால், உள்ளுக்குள் இவரின் எண்ணம், கீழ்கண்டபடியும் இருந்திருக்கும்: 

எப்படியும், மறுபடியும் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் வர வாய்ப்பில்லை. நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக நியமித்தால், கட்டாயம் அவர் தான் அடுத்த பிரதமர். இவர், இந்த அம்மையாருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதால், நாளை, பா.ஜ., ஆட்சி வந்து விட்டால், மறுபடியும், "2ஜி' ஊழல் விஸ்வரூபம் எடுக்கும். அது, பேராபத்தை கொடுக்கும். எனவே, பா.ஜ.,வின் ஆதரவு நமக்கு தேவையெனில், நாம் காங்கிரசை விட்டு விலகுவது மட்டுமல்ல; பா.ஜ.,வை விட, ஒருபடி மேலே சென்று வசைப்பாடினால் நல்லது என்று நினைத்திருப்பார். 

ஒரு வேளை, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கருணையால், பா.ஜ., ஆட்சிக்கு வராமல், உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன், மறுபடியும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏற்கனவே திண்ணைக்கு துண்டை விரித்து விட்டதால், சோனியா நம்மை கூட்டணியில் சேர்த்துக் கொள்வார். நமக்கும் கைத்தட்ட ஒரு கூட்டம் உள்ளவரை, ஏன் கவலை? -இப்படி யோசித்திருப்பார். 

இவரின் ராஜ தந்திர கணக்கு, ஜெயிக்குமா என்பதை, 2014ல் நடக்கும் பார்லிமென்ட் தேர்தல் தீர்மானிக்கும். "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற எம்.ஜி.ஆர் பாடல், அப்போதே, இவரை நினைத்து தான் எழுதப்பட்டதோ...?

1 comment:

  1. மூன்றாவது அணி முயற்சியில் கூட திமுக இருக்கலாம். இதுக்குமேல பாஜ வோட திமுக கூட்டனிவைத்தால் பிறந்த குழந்தைகூட கூப்பிட்டு காரி தூ என்று துப்பும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...