Monday, September 16, 2013

யார் வேண்டுமானாலும் டாக்டர் ஆயிடலாம் போல...!




நம் நாட்டின், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காக, எம்.பி.பி.எஸ்., படிப்பில், "ஹவுஸ் சர்ஜன்' பயிற்சி முடித்த பிறகு, "எக்சிட்' தேர்வு முறையை, அறிமுகப்படுத்தப் போவதாக, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்திருக்கிறது. 

தமிழக மருத்துவர்கள் சங்கம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மனித உயிர்களைக் காக்கும், பொறுப்பு நிறைந்த தொழிலில் ஈடுபடுவோர், தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று, அரசு எதிர்பார்ப்பதில், எந்த தவறும் இல்லை. 

இன்று, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில், மருத்துவம் படித்து வரும் மாணவர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலின், "எக்சிட்' தேர்வு என்னும் தகுதித் தேர்வை நிறைவு செய்தால் தான், இங்கு, மருத்துவராகப் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவர். 

அது போல, இங்குள்ள எம்.பி.பி.எஸ்., - எம்.டி., போன்ற மருத்துவப் பட்டங்கள், சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளால், அங்கீகரிக்கப்படவில்லை. இங்குள்ள மருத்துவக் கல்வியின் தரம், சர்வதேச மருத்துவக் கல்வியின் தரத்துக்கு, இணையாக இல்லை என்பதே, இதற்கு காரணம். 



இன்று, பிற நாடுகளில், மருத்துவத் துறையில், புகழ் பெற்று விளங்கும் இந்திய மருத்துவர்கள் எல்லாருமே, அந்தந்த நாட்டின் தகுதித் தேர்வை, நிறைவு செய்தவர்கள் தான். அமெரிக்கா போன்ற நாடுகளின், மருத்துவத் துறையின் தரத்தோடு, ஒப்பிடும்போது, நாம், 50 ஆண்டுகள், பின் தங்கித்தான் இருக்கிறோம். 

அங்கு, நோயாளிக்கு பரிந்துரைக்கப்படும், ஒவ்வொரு பரிசோதனைக்கும், மருந்துக்கும், மருத்துவர், தகுந்த விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். தேவையில்லாத பரிசோதனைகளையோ, மருந்துகளையோ, நோயாளிக்கு பரிந்துரை செய்ய முடியாது. ஆனால், இங்கு... 

நோயாளிக்கு, நிறைய, "டெஸ்ட்'களை பரிந்துரை செய்து, மளிகை சாமான், "லிஸ்ட்' போல, இரண்டு பக்கத்துக்கு எழுதும் மருத்துவர்கள் தான், விவரமுள்ள மருத்துவராகக் கருதப்படுகிறார். 

அவர், இங்கு, யாருக்கும், விளக்கம் சொல்லவும் தேவையில்லை. 





அது மட்டுமின்றி, இங்கு, ஒரு மருத்துவரிடம், ஆறு மாதம் உதவியாளராக இருந்து, "ஸ்டெதஸ்கோப்பை' காதில் மாட்டவும், "சிரிஞ்சை' பிடித்து ஊசி குத்தவும் கற்றுக் கொண்டால் போதும், யார் வேண்டுமானாலும், டாக்டர் ஆகி விடலாம். எட்டாம் வகுப்பு கூட பாஸ் ஆகாத, போலி டாக்டர்கள், தமிழகத்தில் மட்டுமின்றி, படித்தவர்கள் அதிகம் வாழும், கேரளத்திலும் இருக்கத் தான் செய்கின்றனர். 











இவர்கள், காயத்துக்கு கட்டுப் போடுவதிலிருந்து, கருக்கலைப்பு வரை, அனைத்து சிகிச்சையிலும், வித்தகர்களாக செயல்படுகின்றனர். அப்பாவி கிராம மக்கள், குறைந்த செலவில், சிகிச்சை பெறுவதற்காக, இவர்களை நாடுகின்றனர். நாட்டின் மருத்துவத் துறையின் தரம் மேம்பட வேண்டுமானால், ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்து வரும் டாக்டர்களுக்கு, "எக்சிட்' தேர்வு நடத்தி, ஓராண்டு கிராமப்புற மருத்துவமனையில் பணியாற்றிய பின் தான், எம்.பி.பி.எஸ்., பட்டம் கொடுக்கப்பட வேண்டும். 





ஆனால், அந்த ஓர் ஆண்டு காலத்துக்கு, அரசு உதவி மருத்துவர்களுக்கு இணையாக, சம்பளம் வழங்கப்பட வேண்டும். போலி மருத்துவர்களை ஒழிக்க, முறையான சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். இல்லையெனில், எத்தனை நூற்றாண்டுகளானாலும், நம் மருத்துவத் துறையின் தரத்தை, உயர்த்த முடியாது. (
டாக்டர் டி.ராஜேந்திரன், அருப்புக்கோட்டை)

2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...