Monday, April 16, 2018

மருத்துவர் மீது மோடிக்கு கோபம் ஏனோ?

 
'மத்திய அரசின் உயரிய விருதுகள் அனைத்துமே, எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே கொடுக்கப்படுகின்றன. 'நாட்டில் அந்த விருதுகளை பெற, வேறு துறையைச் சேர்ந்த நபர்களே இல்லையா?' என, கேள்வியை எழுப்பியுள்ளார், பிரதமர் மோடி; 
 
இதன் மூலம், மருத்துவர்கள் மீது, மிக கோபமாக உள்ளார் என, தெளிவாக தெரிகிறது. ஜி.பக்தவத்சலம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர், மறைந்த ராமமூர்த்தி போன்றோருக்கு, மத்திய அரசின், 'பி.சி.ராய், பாரத ரத்னா' போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. 
 
மருத்துவ மாமேதைகள் மட்டுமல்லாது, என்னை போன்ற பல ஆயிரம் மருத்துவர்கள், மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தோம்! இன்று, சினிமாவுக்கு பாட்டு எழுதுவோருக்கும், இசை அமைப்போருக்கும், அந்த பாட்டை பாடியோருக்கும், அந்த பாட்டுக்கு, திரையில் வாய் அசைத்த நடிக-நடிகையருக்கும், ஓடி ஓடி பல பெரிய விருதுகளை கொடுக்கிறது, மத்திய அரசு! 
 
தமிழகத்தில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர், மோகன் காமேஷ், கோவையைச் சேர்ந்த இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர், பழனிவேல், பல ஆண்டுகளாக மருத்துவத் துறையில், கோவை மாவட்ட மக்களுக்கே, சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் விருது பெற தகுதி படைத்தோர் தானே!
 
மருத்துவ மேதைகளுக்கு, மத்திய அரசின் விருதுகளை வழங்குவதில் என்ன தவறு உள்ளது என்பதை, பிரதமர் மோடி தான் மக்களுக்கு விளக்க வேண்டும். மருத்துவர்கள் மேல் உள்ள வெறுப்பால் தானோ என்னவோ, மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவக் கமிஷனை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 
 
சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு, ஆறு மாத பிரிஜ் கோர்ஸ் நடத்தி, அவர்களை. எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்களுக்கு இணையாக, தேசிய மருத்துவக் கமிஷனில் பதிவு செய்ய வைத்துள்ளனர்.ஆரம்ப சுகாதார நிலையங்களில், எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்களுக்கு இணையாக அவர்களை நியமிக்க, சட்டம் இயற்றப் போவதாக அறிவித்து, பிரதமர் மோடி, அலோபதி மருத்துவர்களை அச்சுறுத்துகிறாரோ என, எண்ண தோன்றுகிறது. பிரதமர் மோடிக்கு, மருத்துவர்கள் மேல் கோபம் ஏனோ!---

(மருத்துவர், கே.தங்கமுத்து, பொள்ளாச்சி,)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...