Wednesday, May 2, 2018

இது நியாயமா ஸ்டாலின் அவர்களே



'தி.மு.க., ஆட்சி அமைந்ததும், லோக் ஆயுக்தா அமைக்கப்படும்; இன்றைய அமைச்சர்கள் அத்தனை பேரும், கம்பி எண்ணப் போவது உறுதி' எனக் கூறியுள்ளார், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்! அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்; தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் மட்டும் உத்தமர்கள் என்பது போல், அவர் பேசியிருக்கிறார். 

முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் பல தலைமுறைக்கு கோடி கோடியாக சொத்துகளை குவித்திருப்பது, உலகத்துக்கே தெரியும்.தமிழகம் உட்பட சில மாநிலங்கள், லோக்பால் அமைப்பதில் ஆர்வம் காட்டாமல் காலம் தாழ்த்தி வருகின்றன; இது, வேதனைப்பட வைக்கிறது.

மக்களின் பாதுகாவலர் என்ற பொருள் உணர்த்தும், 'லோக்பால்' என்ற அமைப்பை, நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.மொரார்ஜி தேசாய் தலைமையில், அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம், லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, 1966ல், அன்றைய மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.கடந்த, 1968 முதல், 2013 வரை, எட்டு முறை பார்லிமென்டில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டும், லோக்பால் அமைக்கப்படவில்லை. 

நாடு சுதந்திரம் பெற்ற அன்றே, ஊழல் தலைதுாக்க துவங்கி விட்டது.ராணுவ ஜீப் ஊழல், நகர்வாலா பேங்க் ஊழல், போபர்ஸ் ஊழல் முத்திரை தாள் ஊழல், காமன்வெல்த் ஊழல், கிரானைட் ஊழல் என, பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது...லோக்பால் திட்டம் செயல் வடிவம் பெற்றிருந்தால், நாட்டில் லாலு பிரசாத்களும், கேதான் தேசாய்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்ற நிலை மாறி இருக்கும்.

அரசியல்வாதிகளின் மூலம், கோவில் சொத்துகளும், நாட்டின் வளங்களும் கொள்ளை போவது, தடுக்கப்பட்டு இருக்கும்!கோடிகளை குவிக்க நினைக்கும் அமைச்சர்களுக்கு, சிறிதாவது பயம் இருந்து இருக்கும். லோக்பால் விஷயத்தில், தமிழக அரசின் சப்பைக்கட்டு, நீதிமன்றத்தில் எடுபடவில்லை.'லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து, ஜூன் மாதத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் கெடு விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா நிறுவப்பட்டு, நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட்டால், ஆட்டம் போடும் அரசியல்வாதிகள் கொட்டம் அடங்கி விடும்!
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை,

2 comments:

  1. "நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட்டால், ஆட்டம் போடும் அரசியல்வாதிகள் கொட்டம் அடங்கி விடும்!" பேராசைதான் உங்களுக்கு !

    ஒவ்வொருவரும் அவரவர் வட்டத்தில் நேர்மையாகவும் குறைந்தபட்சம் நேர்மையா இருப்பவரை பிழைக்க தெரியாதவன்(ள்) என் கேலி செய்யாமல் ஆதரித்தாலே போதுமானது
    பின் மாற்றம் வரும் .

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...