Wednesday, February 16, 2011

சென்னை பயிற்சி யுத்தம்...வலுவடையுமா இந்தியா..

சென்னையில் இன்று நடக்கும் உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.

பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய துணைக் கண்டத்தில் வரும் பிப்., 19ல் துவங்குகிறது. இதற்கு, முன்னதாக பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பயிற்சி போட்டியில்(பகலிரவு ஆட்டம்) இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
சச்சின் வருகை:

பெங்களூருவில் நடந்த முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை மிக எளிதாக வீழ்த்தியது. இதனால், வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். கடந்த போட்டியில் பங்கேற்காத சச்சின், இன்று களமிறங்க வாய்ப்பு உண்டு. இவருடன் சேவக் இணைந்து அணிக்கு துவக்கம் தரலாம். காம்பிர் மூன்றாவதாக வருவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சேவக் மட்டும், அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது பெரும் ஏமாற்றமே. கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் போன்ற வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது. விராத் கோஹ்லி, யூசுப் பதான் மீண்டும் அசத்த தயாராக உள்ளனர்.
சுழல் ஜாலம்:
 முனாப் படேல், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் ஆகியோர், எதிரணியின் விக்கெட் வீழ்ச்சியை துவக்கி வைக்க வேண்டும். சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். இது, ஹர்பஜன், அஷ்வின், பியுஸ் சாவ்லா அடங்கிய நமது "சுழல் கூட்டணிக்கு' உற்சாகம் அளிக்கும்.
நியூசி., சோகம்:
நியூசிலாந்தை பொறுத்தவரை சமீபத்தில் பங்கேற்ற 16 ஒருநாள் போட்டிகளில் 14ல் தோல்வியடைந்துள்ளது. உலக கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றது. இதில் சதம் அடித்த கப்டில், ரோஸ் டெய்லர், பிராங்ளின் ஆகிய "டாப் ஆர்டர்' வீரர்கள் நல்ல "பார்மில்' உள்ளனர். இவர்கள் ரன் சேர்க்க முயற்சிக்கலாம்.
வெட்டோரி பலம்:
வேகப்பந்து வீச்சாளர்கள் மில்ஸ், பென்னட், "ஆல்- ரவுண்டர்கள்' ஜேக்கப் ஓரம், ஸ்காட் ஸ்டைரிஸ் போன்றவர்கள் இருந்தும், முதல் போட்டியில் அயர்லாந்து அணி அதிக ரன்கள் (279) குவித்தது. கேப்டன் வெட்டோரி மட்டும் சுழலில் சிறப்பாக செயல்பட்டார். இம்முறை ஜான் ரைட் பயிற்சியில், நியூசிலாந்து அணி எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது.
வெற்றி யாருக்கு?
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, வெறுங்கையுடன் தாயகம் திரும்பியது. இதற்கு பழிதீர்க்க, உலக கோப்பை பயிற்சி போட்டியை பயன்படுத்தலாம். அதேநேரம், வெற்றி நடையை தொடர இந்திய அணி காத்திருப்பதால், ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.

ஜாகிர் கானுக்கு ஓய்வு: தோனி
இன்றைய போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:
கடந்த போட்டியில் "மிடில் ஆர்டர்' சொதப்பியதால் தான் அதிக ரன்கள் சேர்க்க முடியவில்லை. இன்று கடைசி பயிற்சி என்பதால், கடுமையாக போராட முயற்சிப்போம். அணியில் <உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் லீக் போட்டிகளின் போது, ஆடுகளத்துக்கு ஏற்ப, விளையாடும் 11 வீரர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.
ஜாகிர் கானுக்கு இடுப்பு பகுதியில் லேசான வலி தான் உள்ளது. மற்றபடி பெரிய அளவில் எதுவுமில்லை. அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதால், இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில், ஜாகிர் கானுடன் தான் களமிறங்குவோம். இன்று நாங்கள் எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணி, எந்த ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரை சார்ந்து இல்லை. அணிக்கு என்ன தேவையோ, அதை அனைத்து வீரர்களும் சேர்ந்து வழங்குவர். மொத்தத்தில் நியூசிலாந்து, மிக திறமையான அணி.
இவ்வாறு தோனி கூறினார்.
நன்றி : தினமலர்

1 comment:

  1. ஒரு இணையத்தளம் ஒன்றை நாம் ஆரம்பித்துள்ளோம்.. அது தொடர்பாக பேசவேண்டும்.. உங்கள் மின்னஞ்சல் முகவரியை பெற முடியவில்லை... mathurahan@gmail.com இற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்க முடியுமா.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...