Tuesday, May 28, 2013

பணமாகும் தவறுகள், தடுமாறும் இந்தியா? கேள்விக்குறியில் விளையாட்டு..!




"பதினோரு பேர் விளையாடும் விளையாட்டை,10 ஆயிரம் முட்டாள்கள் பார்த்து ரசிக்கும் விளையாட்டு, கிரிக்கெட்' என்ற விமர்சனம், அந்த விளையாட்டைக் கண்டு, மனமகிழ்ச்சிக்காக செய்யப்படும் செயல்கள், ஒழுங்கு முறை ஆட்டமாகத் தொடர்வதற்குப் பதில், பந்தய ஆட்டமாக மாறி, முடிவில், சூதாட்ட ஆட்டமாக மாறிப் போயுள்ளது வேதனைக்குரியது. 

இந்தியாவில் நடைபெற்று வரும், ஐ.பி.எல்., போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த, பவுலர்களான ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் மூவரும், சூதாட்டக்காரர்களுடன் ஒப்பந்தம் போட்டு, போட்டிகளில் சொதப்பியதால், கைது செய்யப்பட்டுள்ளனர். 



கடந்த, மூன்று போட்டிகளிலும், இவர்கள் மூவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில், ஸ்ரீசாந்தின் தந்தை, "என் மகன் அப்பாவி. தோனி, ஹர்பஜன் சிங்கின் கூட்டுச் சதியால் பலியாகியுள்ளான்' என, பேட்டி அளித்துள்ளது வேடிக்கையாய் உள்ளது.

அதிக ரன்கள் எடுத்தால், அதிக விக்கெட்டுகள் சாய்த்தால், பாராட்டு, பரிசு என்ற நிலைமை போய், அதிக ரன் விட்டுக் கொடுத்தால், குறிப்பிட்ட ஓவரில், "நோ பால்' வீசினால், "ஒய்டு' வீசினால், கேட்சை நழுவ விட்டால், ரன் அவுட்டானால் அதிக பணம் என, விளையாட்டே சூதாட்டமாகிப் போயுள்ளது. 

இந்தப் போட்டிகளின் தொடக்க நாளிலும், நிறைவு நாளிலும், திருவிழா என்ற பெயரில், பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. மேலும், விளையாட்டில் கவர்ச்சியைக் கூட்ட, கன்னிகளை, அரைகுறை ஆடையுடன் ஆட வைக்கின்றனர். 

அதாவது, ரன்னோ, விக்கெட்டோ எடுத்தால், ஆட வேண்டும்; அவுட் ஆனாலோ, பந்துகளை, "கேட்ச்' பிடிக்காமல், "மிஸ்' செய்து விட்டாலோ, சோக முகத்தைக் காட்ட வேண்டும். 

இதற்கு, இவர்களுக்கு காசு. கலாசார சீரழிவுக்கும், குறிப்பிட்ட சில நிறுவனங்கள், கோடி கோடியாகப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவும், நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள் நசியவும் காரணமான கிரிக்கெட்டிற்காக, கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிப்பது, வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு அழகா? 

1 comment:

  1. எப்போதே ஆர்வம் குறைந்து விட்டது...

    IPL (தானாகவே) ஒழிந்து விடும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...