Monday, May 6, 2013

தொடரும் மோசடி புகார்கள்... பவர் ஸ்டார் மீது பாய்கிறது குண்டர் சட்டம்...!


கடந்த இரண்டு மாதங்களாக எந்த மீடியாவைத் திறந்தாலும் பவர் ஸ்டார் புராணம்தான். பவர் பல்லு விளக்கினாரு, பவர் பால் குடிச்சாரு என ஏகப்பட்ட செய்திகள். இன்று அப்படி நிலைமை தலைகீழ். 

பவர் ஸ்டார் ரொம்ப ரொம்ப புவர் ஸ்டாராகி வேலூர் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். காரணம் அவரைச் சுற்றிச் சுற்றி அடிக்கும் மோசடி வழக்குகள். கிட்டத்தட்ட ஒரு டஜன் மோசடி வழக்குகள் அவர் மேல் பாய்ந்துள்ளன. 

விளைவு, கிட்டத்தட்ட தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பவர் சீனிவாசனை குண்டர் சட்டத்தில் அடைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது போலீஸ். சமீபத்தில் நீதிமன்ற அனுமதியுடன் அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

ஆந்திர தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.20 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். 

பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வரிசையாக போலீசில் புகார் செய்து வருகின்றனர். சீனிவாசன், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி வக்கீல்களையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். 

பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதன் தனது கட்டுமான தொழிலை அபிவிருத்தி செய்ய பவர் ஸ்டாரின் உதவியை நாடினார். அப்போது பவர் ஸ்டார் சீனிவாசனிடம் ரூ.2 கோடி கடன் கேட்டுள்ளார். அவர் அதற்கு கமிஷனாக ரூ.70 லட்சத்தை முன் கூட்டியே வாங்கி கொண்டார். ஆனால் கடன் பெற்றுத் தரவில்லை.

இதுபற்றி ஜெகநாதன் போலீசில் புகார் செய்தார். இதேபோல் சண்டிகரைச் சேர்ந்த ஜெகன்சிங் என்பவரிடம் ரூ.2 கோடி, கோவாவை சேர்ந்த பிரகாஷ் ரத்தோரிடம் ரூ.16.5 லட்சம் என்று பலரிடம் ஏமாற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். 

இதன் அடிப்படையில் புதிதாக மேலும் 3 வழக்குகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனிவாசன் கமிஷனாக பெற்ற பணத்தில் அண்ணா நகர் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கி குவித்துள்ளார். 

மொத்தம் ரூ.150 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்து பினாமிகள் பெயரில் வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது என்பது பற்றி போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். 

அண்ணாநகர், சாலி கிராமம் ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பவர் ஸ்டார் சீனிவாசன் கணக்கு வைத்துள்ளார். போலீசார் அந்த வங்கிகளில் சீனிவாசனின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர். 

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பவர் ஸ்டார் சீனிவாசன் விரைவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

இதற்கிடையில் போலீஸ் விசாரணையின் போது பேராசைப்பட்டு இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு விட்டேன். எனது சொத்துக்களை விற்று கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன்.  என் சினிமா வாழ்க்கை பாதிக்கும், விட்டுவிடுங்கள், என்று கெஞ்சினாராம். 

திருமங்கலத்தில் உள்ள அவரது மருத்துவனையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவர்களே மருத்துவமனையை மூடிவிட்டுச் சென்று விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...