Saturday, May 25, 2013

தேர்தலுக்காக அரசியல் செய்கிறாரா..? ஜெயலலிதாவின் அறிவிப்புகளின் உண்மை பிண்ணனி என்ன ?


தமிழ்த்தாய் சிலை, 100 கோடி ரூபாய் செலவில், அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு, "உண்மையான' தமிழ் ஆர்வலர்கள் இடையில் கூட, அதிருப்தியைத் தான் ஏற்படுத்தி இருக்கும். 

கடுமையான மின்வெட்டு, விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, எதிர்பார்க்கப்படும் குடிநீர் தட்டுப்பாடு, தடுமாறும் சட்டம் - ஒழுங்கு, பெருகி வரும் வன்முறை, அண்டை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சி போன்ற, பல பிரச்னைகள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில், சிரமங்களை ஏற்படுத்தி உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்து, மக்கள் நிம்மதியாக வாழ, வழி செய்ய வேண்டியது அரசின் முதல் கடமை. 

தமிழை வளர்க்கும் எண்ணம் இருந்தால், முதலில் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழை சரியாக எழுதவும், படிக்கவும் சொல்லித் தரலாம். தமிழ் வளர்த்த சான்றோர் பற்றி அறிமுகம் செய்யலாம். ஓலை சுவடிகளில் உள்ள அரிய பொக்கிஷங்களை, மைக்ரோ பிலிமில் பதிவு செய்து பத்திரப்படுத்தலாம். 

அறிவியல், இயற்பியல் போன்ற பாடங்களுடன், தமிழ்ப் பாடத்தையும் சேர்த்து, கட்டாயப் பாடமாக்கி, மதிப்பெண்களில் முக்கியத்துவம் தரலாம். முன்பெல்லாம், திருப்பாவை, திருவெம்பாவை, திருக்குறள் ஓதுவதில் போட்டி வைப்பர். அது போல, பாரதியார் கவிதைகள், தமிழ் இலக்கணம் போன்றவற்றில், மாநில அளவில் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கலாம். 

அரசியல் போட்டிக்காக செய்யப்படும் விசித்திரமான அறிவிப்புகளுக்கு, இது நேரமில்லை. தமிழை வைத்து பிழைப்பவர்கள் சிலர், ஆரவாரத்துடன் இதை பாராட்டலாம். செயற்கரிய செயல்கள் பல, மக்கள் உள்ளத்தில் நிலைத்து நிற்கும். சத்துணவு திட்டம், புரட்சித் தலைவரின் புகழை, உலகெங்கும் பரப்பியது. 

முதல்வரின் வீராணம் குடிநீர் திட்டம், சென்னை மக்களை காப்பாற்றியது. நேரு உள் விளையாட்டரங்கம், உலகத் தரத்துக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது. "அம்மா உணவகம்' மக்கள் பசி தீர்க்கிறது. மழைநீர் சேகரிப்பு திட்டம், பான் பராக், குட்கா தடை போன்றவை, முதல்வரின் பெயர் சொல்லும்! 

தேர்தல் நெருக்கத்தில், அரசியல் செய்யலாம்; இப்போது, அவசியத்தை மட்டுமே பார்க்க வேண்டும்!

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...