Sunday, April 22, 2018

விவசாய போராட்டங்கள் நாடகம்தானா....!




நான் திருத்துறைப்பூண்டி வட்டம், குன்னுார் கிராமத்தில், விவசாயம் செய்து வருகிறேன்.என் பாட்டனார் காலத்தில், நல்ல நேரம் பார்த்து, விவசாயத்தில் நல்ல விளைச்சல் வர வேண்டும் என, விதை முகூர்த்தம் செய்வர். 

அதன்படி, விதை தெளித்தல் முதல், அறுவடை வரை பணிகள் நடைபெறும்; அவர்கள் நினைத்தபடி, நல்ல மகசூலும் கிடைத்தது.இன்று, விவசாயத்தை பெரும் பொருட்டாக, விவசாயிகள் நினைப்பது இல்லை. விதை தெளிக்கும்போதே, நஷ்டஈடு, நிவாரணம் வாங்க வேண்டும் என தான் விதைக்கின்றனர். 

விவசாயிகளின் போக்கிற்கு ஏற்ப, அரசும் செயல்படுகிறது. தமிழகத்தில், விவசாயிகள் மீது, அக்கறை உள்ளவர் போல் அய்யாக்கண்ணு, பாண்டியன், மாசிலாமணி என, ஆளுக்கு ஒரு அமைப்பை வைத்துள்ளனர். 




'டிவி'க்களில் இஷ்டத்திற்கு அவர்கள் பேட்டி கொடுக்கின்றனர். 
உண்மையாக, விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும், அக்கறை இருந்தால், முதலில் தமிழகத்தில் காணாமல் போன, காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் இவற்றை அவர்கள் கண்டுபிடிக்கட்டும்!

திருச்சியில், காவிரி ஆற்று மணலில் கழுத்தளவு புதைந்து, அய்யாகண்ணு போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் எத்தனை ஆறுகள் ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்பட்டுள்ளன... ஏரி, குளங்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகி விட்டன என்பது, அவருக்கு தெரியுமா...

தமிழகத்தில், திருமலைராஜன், வெட்டாறு, குடமுருட்டி, வெண்ணாறு, மரைக்கா கோரையாறு, பாமணி ஆறு, கோரை ஆறு, அடப்பாறு, முள்ளியாறு, திருவாரூர் ஓடம்போக்கி ஆறு, சென்னையில் கூவம், அரசலாறு, காவிரி, உப நதிகள், கொள்ளிடம் மற்றும் உபநதிகள் ஆக்கிரமிப்புகளால் மூழ்கி உள்ள, ஆறுகளின் பட்டியல் நீண்டபடி உள்ளன.

எந்த ஆற்றிலாவது தண்ணீர் ஓடுகிறதா... அதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை, அய்யாகண்ணு உள்ளிட்ட, அவருடன் போராடுவோர் கண்டறிந்து, பின் காவிரிக்கு வர வேண்டும்; வெத்து போராட்டங்கள் என்றும் வெல்லாது!மாநிலத்தில் நீர் நிலைகளை காப்பாற்ற, உருப்படியான ஐடியாக்களை, அரசுக்கு தெரிவித்து, உறுதுணையாக இருக்க பாருங்கள்! (நி.சங்கர், திருத்துறைப்பூண்டி)

1 comment:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...