Sunday, May 26, 2013

ஓ... இதனாலதான் விஜய்-யை மக்களுக்கு பிடிக்குதோ...!



விஜய் குறித்து பேசிய கமல்ஹாசன், விஜய்யின் வெற்றி பூவா தலையா போட்டு வந்த வெற்றியல்ல, கடின உழைப்பால் கிடைத்த வெற்றி இது என்றார். கை தூக்கிவிட அப்பா இருந்தாலும் சினிமாவில் நிலைத்து நிற்க அதையும் தாண்டிய கடின உழைப்பு வேண்டும். விஜய்யிடம் அது இருக்கிறது. விஜய்யை ஒருவர் விரும்புவதற்கான ஐந்து காரணங்களை பார்ப்போம்.


1. நடனத் திறமை!

ஆரம்ப காலத்தில் விஜய்யின் நடன அசைவுகள் சுமாராகவே இருக்கும். பலமுறை நடன அசைவுகளுக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார் விஜய். அது விஜய்க்கும் தெ‌ரியும். 



எதில் பலவீனமாக இருக்கிறோமோ அதில் சிறந்தவனாக வேண்டும் என்ற உந்துதலில் வீட்டில் கடுமையாக பயிற்சி எடுத்த பின்பே செட்டில் நடனக் காட்சிக்கு கேமரா முன் வந்து நிற்பார். 


இப்போது தமிழ் சினிமாவில் நடனத்தில் நம்பர் ஒன் இம் ஹீரோ விஜய்தான். எவ்வளவுதான் நன்றாக ஆடினாலும் விஜய்யைப் போல ஆட முடியலை, அவரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று சூர்யாவே ஒருமுறை கூறியிருக்கிறார்.


2. கடின உழைப்பும் விடா முயற்சியும்!

நாளைய தீர்ப்பு படத்திற்கு முன்பு குடும்பத்துடன் அம‌ர்ந்து பத்தி‌ரிகை ஒன்றிற்கு பேட்டி தந்தார் விஜய். அதில் ர‌ஜினியைப் போல ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் என்று தெ‌ரிவித்திருப்பார். 



ஆனால் அந்த லட்சியம் அவ்வளவு எளிதில் அடையக் கூடியதாக இல்லை. தொடர்ச்சியாக அவரது தந்தை படங்கள் எடுத்த போதிலும் ஆக்சன் ஹீரோ இமேஜை பெற அவர் கடினமாக உழைக்க வேண்டி வந்தது. முக்கியமாக விடா முயற்சி. 

இன்றைய தேதியில் அறிமுகமானதிலிருந்து தொடர்ச்சியாக தொய்வில்லாமல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் என்று இவரைச் சொல்லலாம் (இன்னொருவர் கமல்). 

இன்று அடுத்த ர‌ஜினி என விநியோகஸ்தர்களால் பாராட்டப்படும் நிலையிலும் தலைவா படம் வெளிவரும் முன்பே ‌ஜில்லா படத்தில் கமிட்டாகி நடிக்கும் விஜய்யின் கடின உழைப்பு அவ‌ரின் ரசிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.


3. கச்சிதமான உடம்பு!

உடம்பை எப்போதும் கத்தி மாதி‌ரி வச்சுக்கணும்... கட்டுமஸ்தான உடம்பு குறித்த கேள்வி வந்த போது விஜய் சொன்ன வார்த்தைகள் இவை. கத்தியை எப்படி வேண்டுமானாலும் வீசலாம். அதுமாதி‌ரி உடம்பு எந்த திசையிலும் வளையக்கூடியதாக எதற்கும் ஒத்துழைப்பு தரக்கூடியதாக இருக்க வேண்டும். 


சிலருக்கு கரளை கரளையாக மசில் இருக்கும், ஆனால் அரையடி உயர மதிலை தாண்ட மூச்சு வாங்கும். துப்பாக்கி படத்தில் வரும் அறிமுகப் பாடலில் விஜய்யின் கச்சித உடம்பை பார்க்கலாம். அவ‌ரின் அதிரடி ஆக்சனுக்கும், நடனத்துக்கும் அவ‌ரின் உடலமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.

4. அறிமுக இயக்குனர்களின் தலைவாசல்!

முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் விஜய் மிகக்குறைவாகவே நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த துப்பாக்கி, நண்பனை கழித்தால் முன்னணி இயக்குனர்கள் எவ‌ரின் படத்திலும் விஜய் நடிக்கவில்லை என்றே சொல்லலாம் (மின்சார கண்ணா கே.எஸ்.ரவிக்குமார் விதிவிலக்கு). 


அதிக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய இளம் நடிகர்களில் முன்னணியில் இருக்கிறார் விஜய். நண்பன், துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு கௌதம், லிங்குசாமி போன்றோர் விஜய்யின் கால்ஷீட்டுக்கு காத்திருந்தும் நேசன் என்ற பெயர் அறியாத இயக்குனருக்குதான் தனது புதிய படத்தை இயக்கும் பொறுப்பை தந்திருக்கிறார். 

நேற்று வந்த நடிகர்களே முன்னணி இயக்குன‌ரின் படத்தில்தான் நடிப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கையில் விஜய்யின் இந்த பண்பு உதவி இயக்குனர்களை கை தூக்கிவிடும் அ‌ரியபணியை செய்கிறது.


5. குழந்தைகளின் நடிகர்!

ர‌ஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் ஒரே நடிகர் என்றால் அது விஜய்தான். நடனமா, ஆக்சனா இல்லை காமெடியா... எது என்று தெ‌ரியாது. வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் மூன்று பேர் விஜய் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். 


ஆபாசமான, வன்முறையான படங்களை இப்போது அவர் தேர்ந்தெடுக்காமல் இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகளை கவர்வதுதான் இருப்பதிலேயே கடினமானது. காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. விஜய்யின் படங்கள், அவ‌ரின் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் குழந்தைத்தனத்தின் வெற்றியாக இதனை சொல்லலாம். 

2 comments:

  1. ரசிக்க வைத்தது காரணங்கள்...

    ReplyDelete
  2. appo Vijaykku break kodutha Fazil,Vikraman ivargalai arimugapaduthiyathe Vijay thaano?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...