Tuesday, January 25, 2011

பாஸாகிவிட்டார் - விஜய்


ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விளம்பரங்களா? நல்ல கதையா? என்று பட்டிமன்றம் நடத்தினால் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்ற பதில்தான் வரும். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை. 

பெரிய பெரிய நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், அந்நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் சிறுபட்ஜெட் படங்கள் பல பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. அப்படியே ரீலிஸ் ஆனாலும் அது கடலுக்குள் எதிர் நீச்சல் போட்ட கதையாகவே இருக்கிறது. எதிர்நீச்சல் போட்டு ஜெயிப்பது என்பது? எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியும்தானே!

 அப்படி பெரிய நிறுவன படங்களுடன் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றிருக்கிறது காவலன் படம். படப்பிடிப்பில் ஆரம்பித்த பிரச்னை படம் முடிந்து பெட்டிகளை தியேட்டருக்கு அனுப்பும் வரை நீடித்துக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் அசினுக்கு எதிர்ப்பு என்று கிளம்பிய சிலர், பின்பு விஜய்க்கு எதிராக பிரச்னையை திசை திருப்பினார்கள். இது ஒருபுறமென்றால் படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் கடைசி நேரத்தில் பண நெருக்கடி‌யும் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக பல வருட அனுபவம் பெற்ற விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரையே நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மலை‌போல வந்த பிரச்னைகளையும், சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு பொங்கல் தினத்தில் படத்தை ரீலிஸ் செய்து விட்டனர். ரீலிஸ் முயற்சியில் பெற்ற வெற்றி, பட ரிசல்ட்டிலும் கிடைத்து விட்டது.

இத்தனைக்கும் காவலனுடன் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவான இளைஞன் உள்ளிட்ட படங்களுக்கு டி.வி. சேனல்கள் மற்றும் எப்.எம். ரேடியோக்களில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பரப்படுத்தப்பட்டது. இன்னமும் விளம்பரங்கள் தொடர்கின்றன. காவலன் விளம்பரம் வெளியிடுவதற்கும் சிலபல சிக்கல்கள் உருவாக்கப்பட்டதால் எந்தவித விளம்பரமும் இல்லாமல் களத்தை சந்தித்து வெற்றி பெற்றது.

காவலனுக்கு பல சிக்கல்களால் விளம்பரம் செய்ய இயலாமல் போனது. ஆனால் இதேபோல இதற்கு முன்பு சில படங்கள் எந்தவித விளம்பரங்களும் இன்றி வெற்றியடைந்திருக்கின்றன. நாடோடிகள் படம் ரீலிஸ் ஆகும்வரை டி.வி., எப்.எம்.களில் விளம்பரப்படுத்தப்பட வில்லை. பட ரிசல்ட் வந்த பிறகுதான் படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதேபோலதான் மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களுக்கும். விளம்பரத்தின் துணையின்றி வெற்றி பெற்ற படங்கள் அத்தனையும் தரமான படங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

நந்தலாலா, தா, தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல தரமான படங்கள் சரியான தியேட்டர் கிடைக்காததாலும், விளம்பரங்கள் இல்லாததாலும் வெற்றி நூலிழையில் கைவிட்ட படங்கள். இதி்ல தா படத்தை மீண்டும் ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் அதன் தயாரிப்பாளர்கள் அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். மைனா என்ற வெற்றிப்படம், உதயநிதி ஸ்டாலின் என்ற பெரிய தயாரிப்பாளர் மூலம் வெளியானதால் வெற்றி பெற முடிந்தது. அந்த படத்தை அவர் வாங்கி வெளியிடாமல் இருந்திருந்தால் தா, நந்தலாலா, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களின் நிலைதான் மைனாவிற்கும் ஏற்பட்டிருக்கும் என்பது விவரமறிந்தவர்களின் கருத்து.

எந்தவித கதையம்சமும் இல்லாத படத்தில் இடம்பெறும் ஒரு சில நல்ல வசனங்களை மட்டும் எடுத்து விளம்பரமாக்கி, அந்த விளம்பரத்தை நிமிடத்திற்கு நிமிடம் டி.வி. மற்றும் எப்.எம். ரேடியோக்களில் வெளியிட்டு படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார்கள். விளம்பரத்தை நம்பி படத்தை பார்க்கப் போன பலருக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம். சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இந்த விவகாரத்தை சற்று மறைமுகமாக சாடிய சங்கத்தலைவர் இராம.நாராயணன், டி.வி., விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும், என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார். எப்போதும்போலவே அந்த தீர்மானமும் ஏட்டிலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கும் என்பது மற்ற சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு தெரியாதா என்ன?

பண பலம், அதிகார பலம் உள்ள பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இன்று தமிழ்சினிமா தலைகீழாக போய்க் கொண்டிருக்கிறது என்று கூறும் முன்னணி இயக்குனர் ஒருவர், ‌ரீலிசுக்கு தயாராகி நூற்றுக்கணக்கான படங்கள் தியேட்டர் கிடைக்காமல் பெட்டிக்கும் முடங்கிக் கிடக்கிறது என்கிற அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கிறார்.

சமீபத்தில் எப்.எம். ரேடியோ ஒன்றில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் இரு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். என்ன‌டா ரெண்டு நாளா ஆளையே காணோம் என்று ஒரு நண்பர் கேட்க, அதற்கு பதில் சொன்ன மற்றொரு நண்பர், இளைஞன் படம் பார்த்‌தேன். ரொம்ப நல்லா இருந்துச்சி. அதான் ரெண்டு நாளா மூணு ஷோவையும் பார்த்தேன், என்கிறார். இப்படிப்பட்ட விளம்பரங்கள் மூலம் பெறும் வெற்றி உண்மையான வெற்றியா? எந்தவித விளம்பரமும் இன்றி பெறும் வெற்றி உண்மையான வெற்றியா?

1 comment:

  1. அப்போ சுறா படம் என்ன பெரும் மாபெரும் தோல்வியா இது கொஞ்சம் ஓவர்

    நானும் விஜய் ரசிகன் தான் இந்த் படம் பிரசாந்த் மாதிரி நடிகர்களுக்கும் மலையாளி போன்ற நடிகர்களுக்கு பொருந்தும் தளபதிக்கு இந்த படம் தான் உண்மையான தோல்வி ரசிகன் எங்களுக்கு பிடிகவேனும்
    வீம்புக்கு போய் சொல்ல கூடாது நீங்கள் விஜய் ரசிகன் என்றால் உங்கள் மனசை தொட்டு சொல்லுங்க இந்த படம் உங்களுக்கு பிடித்து இருக்க
    மலையாள நாய்கள் பார்க்க வேண்டிய படம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...